திருநாங்கூர் தொல்லியல் அகழாய்வு
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார்
தொல்லியல் துறை
நாகை
மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள திருநாங்கூரில்
2018-2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு தொல்லியல் துறையின் அனுமதியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால்
தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வு 2019 மே-ஜூன் மாதங்களில், முனைவர்
வீ.செல்வகுமார் இணைப்பேராசிரியர் நடத்திவரும் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் நிதிபெற்ற திட்டத்தின் உதவியுடன் நடைபெற்றது.
இந்த
அகழாய்வில் சங்க காலத் தொல்லியல் சான்றுகள் பல வெளிப்பட்டுள்ளன. நாங்கூர் ஒரு சங்க
கால வாழ்விடமாகும். நாங்கூர் குறித்த செய்திகள்
இடைக்கால இலக்கியங்களில் உள்ளன. சங்க காலச் சோழ அரசன் கரிகாலன் நாங்கூர் வேளின் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும்
ஒரு செவி வழிச் செய்தியும் உள்ளது.
தாய்லாந்தில்
உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு
நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டி அதை மணிக்கிராமத்தார் என்ற வணிகக் குழுவின்
மேற்பார்வையில் விட்டமையைத் தெரிவிக்கின்றது, அக்கல்வெட்டு கூறும் நாங்கூருடையான் என்பவர் சீர்காழிக்கு அருகில் உள்ள இந்த நாங்கூரைச்
சேர்ந்தவர் என ஊகிக்கலாம். நாங்கூர் பகுதியில் பதினோரு வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன.
இங்கு பல சிவன் கோயில்களும், சோழர், பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன. இக் கோயில்களின் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான
மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இடைக்காலத்தில்
நாங்கூர் ஒரு நாட்டுப் பிரிவாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் நாங்கூர் நாட்டின் கீழ் இருந்தது. காவிரிப் படுகைப் பகுதியில் நாடு உருவாக்கம், வாழ்விடங்களின் வரலாற்றை அறிவதற்காக
இந்திய அரசு தொல்லியல் துறையின் அனுமதியுடன் நாங்கூரில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டது.
2019
மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பெற்ற தொல்லியல் அகழாய்வுகளில் சங்க காலம் முதல் நவீன காலம்
வரையிலான தொல்லியல் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு
பானை வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீன், உருவம், மாட்டு வண்டி உள்ள பானையோட்டுக்
கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்புப் பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறை
இருந்தமைக்கான சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன.
இடைக்காலத்தின்
கூறை ஓடுகள், செங்கற்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்திரைப் பதிவுகள்,
சுடுமண் தாயம், கண்ணாடி மணிகள், கல் மணிகள் போன்றவை அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. இங்கு
வாழ்விடச் சான்றுகள் நான்கு மீட்டர் ஆழத்திற்கும்
மேல் கிடைக்கின்றன. இந்த அகழாய்வு நாங்கூர் ஒரு சிறப்பான சங்ககால் ஊர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த
ஆய்வு, வைணவ திவ்ய தேசங்கள் மற்றும் தேவாரத் தலங்கள் பல இரும்பு காலத்திலிருந்தே ஊர்களாக
உருவாகியுள்ளன என்று உணர்த்துகின்றது. மூதூர் எனப்படும் பல சங்க கால ஊர்கள் நாடுகள் எனப்படும் தலைமையிடங்களாக உருவாயின. இந்த
ஆய்வு காவிரிப் படுகைப் பகுதியின் ஊர்கள் உருவாக்கம், நாடுகளின் தோற்றம், மற்றும் வேளாண்மையின்
தொடக்கம் குறித்து ஆராய்கின்றது. இவ்வூரின் வரலாற்றுச் சிறப்பை அறிய மேலும் ஆய்வுகள்
நடத்தப்பட உள்ளன.
தமிழ்ப்
பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் அகழாய்வைப் பார்வையிட்டு. தமிழ்ப்
பல்கலைக்கழகம் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டியும் வெளிக்கொணர பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது
என்று கூறினார்.
நாங்கூரில்
மேலும் அகழாய்வு நடத்தினால் பல சங்க கால, இடைக்காலச் சான்றுகள் வெளிப்பட வாய்ப்புள்ளது.
நாங்கூர் குறித்த இலக்கியக் குறிப்புகள்
நாங்கூர் குறித்த குறிப்புகள் பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் இருப்பதாக நெடுஞ்செழியன் எழுதிய நாங்கூர் வரலாறு என்ற நூலில் சுட்டுகின்றார். ஆனால் நாங்கூர் குறித்த குறிப்புகள் சங்க இலக்கிய உரையாசிரியர்களால் சுட்டப்படுகின்றன. இதுவரை நேரடியான குறிப்புகளை சங்க இலக்கியத்தில் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே பிற்காலக் குறிப்புகளே நாங்கூர் குறித்து விவரிக்கின்றன. நாங்கூர் சங்க காலத் தொல்லியல் இடம் என்பது அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் நாங்கூர் குறித்த குறிப்புகள் உள்ளதாக எனது பெயரில் செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது. இது நெடுஞ்செழியனின் நூலின் அடிப்படையிலானது. அகழாய்வுப் பணியில் இருந்த சமயத்தில் நேரிடையாக பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் உள்ள தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை. ஆய்வு முறையில் இரண்டாம் நிலைச் சான்றுகளை முற்றிலும் உறுதி செய்யாமல் ஏற்றல் கூடாது என்பதற்கு இது ஒரு படிப்பினை.